தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


கொமன்வெல்த் மாநாட்டை நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ அரங்கில்நடத்தும் இலங்கை அரசின் திட்டம் அவ்வளவு இலகுவாக கைகூடும் போலத் தெரியவில்லை. காரணம் இன்றுவரைக்கும், இந்த மாநாட்டை கொழும்பில் தான் நடத்துவது என்ற உறுதியான அறிவிப்பு ஏதும்
உரியதரப்பில் இருந்து வெளியாகவில்லை. 2011 பேர்த்தில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்குப் பின்னர் வரும் நவம்பர் 15 தொடக்கம் 18 வரை கொமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்ட போதிலும், கொமன்வெல்த் உறுப்பு நாடுகளின் நிலைப்பாடு இன்னமும் சந்தேகத்துக்குரியதாகவே இருந்து வருகிறது.சுதந்திர ஆணைக்குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு அமைச்சில் இருந்து பொலிஸ் திணைக்களத்தை தனியாகப் பிரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது எந்தளவுக்கு சரியானது என்று உறுதிப்படுத்த முடியவில்லை. எவ்வாறாயினும், நிபந்தனைகளுக்கு இணங்கி அரசாங்கம் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துமா என்பது சந்தேகத்துக்குரியது.

பேர்த் மாநாட்டின் முடிவில், அடுத்த மாநாடு இலங்கையில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் தொடக்கம், கனடா இதனை எதிர்த்தே வந்தது. மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றத்தை காண்பிக்கத் தவறினால், இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டைத் தாம் புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் விடுத்து வந்த எச்சரிக்கை, இந்தளவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் எதிர்பார்த்திருக்காது. ஏனென்றால், கனடாவின் சீற்றம் குறைந்து விடும் என்றோ அல்லது ஏனைய நாடுகள் அதன் பின்னால் எடுபடாது என்றே இலங்கை அரசாங்கம் கருதியிருந்தது. எனக் குறிப்பிடும் அவர்,

தனது ஆய்வில்,

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா அமைப்புகள் போன்று கொமன்வெல்த் அவ்வளவாக கரிசனை காட்டாத துணிச்சல் தான் அரசாங்கத்தை அவ்வாறு நம்ப வைத்தது. ஆனால், மனித உரிமைகளுக்கும் அப்பால், இப்போது பிரச்சினையாக உருவெடுத்திருப்பது ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றிய கேள்விகள் தான். இவை கொமன்வெல்த் அமைப்பின் கொள்கைகள் மற்றும், பெறுமானத்துக்கு சவால் விடும் வகையில் இருப்பது அரசாங்கத்தைப் பெரும் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது. எப்படியாவது கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்திவிட வேண்டும் என்ற உறுதியில் இலங்கை அரசாங்கம் இருந்தாலும், அதற்குச் சாதகமான புறச்சூழல் தற்போது குறைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

கடந்த 10ஆம் திகதி கொழும்பு வந்த கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா, மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்த பேச்சுக்களில் கலந்து கொண்டார்.

அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மதிய விருந்துடனான சந்திப்பு, வெளிவிவகார அமைச்சர் பீரிசஸுடன் இராப்போசன விருந்துடனான சந்திப்பு, நாடாளுமன்றத்தில் மதியபோசன விருந்துடன் சபாநாயகருடன் சந்திப்பு என்று அவரது சந்திப்புகள் இடம்பெற்றன. இந்த விருந்துகளும், பேச்சுகளும், கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் தான் நடத்துவது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு எந்த வகையிலும் துணையாகவில்லை.

காரணம், கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் தான் நடத்துவது என்றோ அல்லது அதை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கோ அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. இனிமேல், அதைத் தீர்மானிக்கும் பொறுப்பு கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குத் தான் உள்ளது. அவுஸ்திரேலியா, பங்களாதேஸ், ஜமைக்கா, நியுஸிலாந்து, வனாட்டு, நமீபியா, கானா, மாலைதீவு, ரினிட்டாட் அன் டுபாகோ ஆகிய நாடுகள் தான் இதில் அங்கம் வகிக்கின்றன. இதற்கு இப்போது தலைமை வகிப்பது பங்களாதேஸ். கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, இந்த அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், இலங்கை விவகாரம் குறித்தும் ஆராயப்பட வேண்டும் என்றும், கொழும்பில் இருந்து மாநாட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகள் கொமன்வெல்த் செயலகத்தை வலியுறுத்தி வருகின்றன.

கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்ட நிகழ்ச்சி நிரலில், இலங்கை விவகாரம் சேர்க்கப்பட்டால், மாநாடு கொழும்பில் நடப்பது கேள்விக்குறியாகி விடும் என்பதை இலங்கை அரசாங்கம் நன்றாகவே அறியும். அதனால் தான், லண்டன் சென்ற வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இந்த விவகாரத்தை ஏப்ரல் கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது பேர்த் தீர்மானத்துக்கு எதிரானது என்று கொமன்வெல்த் செயலரிடம் கண்டனம் தெரிவித்திருந்தார். இதன் பின்னரே கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா கொழும்பு வந்திருந்தார். அவரது பயணம், கொமன்வெல்த் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கானது அது ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அதை அரசாங்கம் அறிந்திருந்த போதிலும், வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, கொமன்வெல்த் மாநாடு கொழும்பில் தான் நடந்கும் என்று கமலேஸ் சர்மா உறுதிப்படுத்தியுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். அதை மறுநாளே கொமன்வெல்த் செயலகம் மறுத்தது. அவர் அவ்வாறு எதையும் கூறவில்லை என்று கொமன்வெல்த் செயலகம் அறிவிக்க அரசாங்கத்தின் நிலை, பொல்லைக் கொடுத்து அடி வாங்கியதாகி விட்டது.

பேர்த்தில் திட்டமிட்டபடி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா என்பதை ஆராய்வதே கமலேஸ் சர்மாவின் பயணத்தின் நோக்கம். இன்னமும் மாநாட்டை கைவிடுவது குறித்தோ, இடம்மாற்றுவது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், இலங்கையில் ஏற்பாடுகளை கவனிக்க வேண்டியது அவரது பொறுப்பு. அதையே, அவர் இடத்தை உறுதிப்படுத்தி விட்டதாக கருதிக் கொண்டு வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டது சிறுபிள்ளைத்தனமானது. இந்தநிலையில், கொழும்பில் மாநாட்டை நடத்துவதானால், இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய மூன்று நிபந்தனைகளை கொமன்வெல்த் செயலகம் விதித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுதந்திர ஆணைக்குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு அமைச்சில் இருந்து பொலிஸ் திணைக்களத்தை தனியாகப் பிரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது எந்தளவுக்கு சரியானது என்று உறுதிப்படுத்த முடியவில்லை. எவ்வாறாயினும், நிபந்தனைகளுக்கு இணங்கி அரசாங்கம் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துமா என்பது சந்தேகத்துக்குரியது.

ஏப்ரலில் நடக்கவுள்ள கொமன்வெல்த் அமைச்சரவைக் கூட்டத்தில் தான், இந்த விவகாரம் குறித்து ஆராயப்படவும், முடிவுகள் எடுக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்னதாக எந்த இறுதியான தீர்மானத்தையும் யாராலும் அறிவிக்க முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக கூறமுடியும் மாநாட்டை இலங்கையில் தான் நடத்துவது என்று பேர்த் உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதை ஏற்கனவே திட்டமிட்டவாறு நடத்தி முடிப்பதற்காக இலங்கை போராடியே ஆகவேண்டும். இந்தப் போராட்ட நிலையை உருவாக்கிக் கொண்டதே இலங்கை அரசாங்கம் தான் என்பதில் சந்தேகமில்லை. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இதில் முக்கியமானது. கிட்டத்தட்ட, இலங்கை தொடர்பான சில சந்தேகங்கள், கேள்விகளுடன் இருந்த நாடுகள் அமைப்புகளெல்லாம், ஒரு முடிவையே எடுக்கத் தூண்டிய நிகழ்வு அது.

பிரதம நீதியரசரைப் பதவிநீக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கையானது பொருத்தமற்ற நேரத்தில் எடுக்கப்பட்ட விவேகமற்ற முடிவு என்றே பொதுவான கருத்து நிலவுகிறது. இன்னொரு பக்கத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக இன்னொரு தீர்மானத்துக்கான முயற்சிகள் தீவிரமடைந்து கொண்டுள்ள சூழலில், கொமன்வெல்த் விவகாரத்தில் இந்தளவுக்கு இறுக்கம் உருவாகும் என்று அரசாங்கம் நினைத்துக் கூடப் பார்த்திருக்காது.

இப்போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானமும் கொமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமற்ற வகையில் அமையும் என்பதற்கான அறிகுறிகளே வெளிப்படுகின்றன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ள அறிக்கையின் காட்டமும், இன்னொரு தீர்மானம் கொண்டு வரப்போவதான அமெரிக்காவின் அறிவிப்பும், இதற்குக் கட்டியம் கூறுவதாக உள்ளன. இந்தநிலையில், மார்ச் கூட்டத்தொடர் முடிந்த அடுத்த மாதமே, கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டம் லண்டனில் நடக்கவுள்ள நிலையில், ஜெனிவா தீர்மானம் அதில் எதிரொலிப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

ஏற்கனவே இலங்கை விவகாரம் குறித்த சர்ச்சைகள் தீவிரமாக உள்ள நிலையில் ஜெனிவா தீர்மானமும் இணைந்து கொள்ளும்போது, கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் இருந்து தூர விலக்கி வைக்கும் நிலையை உருவாக்கி விடலாம். இப்படியொரு நிலை ஏற்பட்டால், அதாவது ஒன்றின் மாநாடு கைவிடப்பட்டால் அல்லது லண்டனுக்கோ மொறிசியசுக்கோ மாற்றப்பட்டால், இலங்கை தொடர்ந்தும் கொமன்வெல்த்தில் அங்கம் வகிக்குமா என்ற கேள்வியும் எழும். என்னதான் அரசாங்கம் தலைகீழாக நின்று கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தினாலும் கூட, போர் வெற்றியின் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கை பற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பிம்பம் உடையத் தொடங்கிவிட்டது என்பதை ஏற்றேயாக வேண்டும்.

போருக்குப் பின்னர், கிடைத்த நான்கு ஆண்டு இடைவெளியை அரசாங்கம் சரிவரப் பயன்படுத்தத் தவறியதே இதற்குக் காரணம். அதன் விளைவுகள் தான் இப்போது அரசாங்கத்தைத் துரத்தத் தொடங்கியுள்ளன. இந்தத் துரத்தல் ஜெனிவாவுடனோ, கொமன்வெல்த்துடனோ முடிந்து விடுமா அல்லது அதற்கு மேலும் தொடரப் போகிறதா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

கே. சஞ்சயன்

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -