தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.

அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.

இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.

இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.

'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.

'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.

'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.

'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.

'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.

கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.

ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.

எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.

அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.

முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -