தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


ஈழத் தமிழர்களது விடுதலைக்கான உரிமைப் போராட்டத்தின்  தொடர்ச்சியாக லண்டனில் இருந்து இந்தியா நோக்கி ஈழத்தமிழர்களுக்கான நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் ஒன்று நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 29 மாலை 6:00 மணிக்கு லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலைக்கு முன்பாக இந்த நடைபயணம் ஆரம்பிக்கவுள்ளது.

ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான நீதி கோரும் நடை பயணங்கள் பல ஏற்கனவே நடந்திருந்தாலும்  அவை அத்தனைக்கும் ஏதோ ஒரு அமைப்பின் பின் புலத்திலேயே நடைபெற்றது.
கணொளி இங்கு...



ஆனால் இந்த நடை பயணமானது தனி ஒரு மனிதனாக தனது சுய விருப்பில் நடாத்திமுடிக்க தீர்மானித்துள்ளார் சி.லோகேஸ்வரன் என்பவர். ஏனெனில் தற்போது நிலவும் பிளவுகளுக்கு நடுவே தனது இந்த போராட்டம் சிக்கி திசைமாறாமல் இருக்கவும், தனது நோக்கம் சரியான முறையில் நிறைவேற வேண்டும் என்ற நோக்கோடே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சி.லோகேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
2009 ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழர்களை கொன்றழிக்கும் கொடிய போரை சிறீலங்கா அரசு இராணுவ இயந்திரத்தின் மூலம் அரங்கேற்றிக்கொண்டிருந்த வேளை அங்குள்ள தமிழர்களை காக்கக் கோரி தமிழகத்தில் தன் உடலில் தீயிட்டு தமிழர்கள் நெஞ்சில் உணர்வுத் தீயை கொளுந்துவிட்டு எரிய வைத்த வீரத் தமிழமகன்முத்துக்குமாரின் 4ம் ஆண்டு நினைவு நாளில் இந்த நடைபயணம் ஆரம்பிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
லண்டனிலிருந்து இந்தியா நோக்கி அதிக தூரம் கொண்டதும் கடினமானதுமான மனிதநேய நடைபயணமானை சி.லோகேஸ்வரன் அவர்கள் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதானது அண்மிக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
அது மட்டுமன்றி இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் மகாத்மா காந்தி சமாதியை காந்திய வழியில் சென்றடையவுள்ள இந்த நடைபயணம் இற்றைக்கு 26 ஆண்டுகள் முன் நீராகாரம் கூட அருந்தாது இந்திய தேசத்திடம் ஐந்தம்சக் கோரிக்கையினை முன்வைத்து 12 நாட்கள் பட்டினிப் போர் புரிந்து உயிர் பிரியும் நேரத்திலும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்என்று உணர்வையும் விடுதலை வேட்கையையும் விதைத்துச் சென்ற தியாக தீபம் திலீபனின் நினைவு நாளில் நிறைவு பெறவுள்ளது. இப்போராட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் என்பதோடு மீண்டும் ஓர் மக்கள் புரட்சியையும் ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவிருக்கும் சி.லோகேஸ்வரன் 15.01.2009 அன்று இலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் தமிழீழ ஆதரவாளருமான தொல். திருமாவளவன் அவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட போது அப்போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியத் தலைநகரில் அமைந்துள்ள பாராளுமன்றம் முன்பாக 6 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டவர்.
அதன் பின் தொடர்ந்து ஈழத்தமிழர்கள்அழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் கொதித்தெழுந்த தமிழர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வந்த வேளை அதன் உச்சமாய் தீக்குழிப்பு போராட்டங்களும் நடந்தமை அனைவரும் இலகுவில் மறக்கும் விடையம் அல்ல.
29.01.2009 அன்று வீரத் தமிழமகன்முத்துக்குமார், அதன் பின் 12.02.2009 அன்று ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் ஈகப்பேரொளிமுருகதாசன் வரிசையில் 14.02.2009 அன்று லண்டனில் பிரித்தானியப் பிரதமரின் வாசஸ்தலம் முன்பாக தன் உடலில் தீ மூட்டிக் கொண்டவர்தான் இந்த நடைபயணம் மேற்கொள்ளும் லோகேஸ்வரன்.
இருப்பினும் பிரித்தானியக் காவல்துறையினரின் துரித செயற்பாட்டால் காப்பாற்றப்பட்டு பின் தற்கொலைக்கு முயன்ற குற்றச்சாட்டில் கைதாகி 6 மாத காலம் சிறை இருந்து மீண்டவர்.அதன் பின்னும் ஓய்வில்லாது இன விடுதலைக்காய் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வரும் இவர் 2010ம் ஆண்டு, 2011ம் ஆண்டுகளில் நடைபெற்ற மனிதநேய நடைபயணங்களில் பங்குகொண்டவர். அத்தோடு 2010ல் மன்செஸ்ரர் பகுதியிலிருந்து லண்டன் வரை மனிதநேய துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தனையும் செய்த இவர் ஒரு குடும்பத் தலைவர் என்பதும் நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறான நிலையிலும் தனது குடும்பம், தனது வாழ்க்கை என்று சுயநலத்தோடு வாழாமல் தனது தேசம் தனது மக்கள் எனும் தேசப்பற்றோடு செயற்படுவது போற்றுதற்குரியது.
இவரின் தேசப்பற்றிற்கும் கடின உழைப்பிற்கும் இந்த நடைபயணத்திற்கும் உலகத் தமிழர்களிடமும், மக்கள் கட்டமைப்புக்களிடம் இருந்தும் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறார் லோகேஸ்வரன்.


.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -