- Back to Home »
- ஈழம் »
- இலங்கைத்தீவில் இந்தியாவும் சீனாவும் – ஏமாற்றப்படும் ஈழத்தமிழர்களும்
Posted by : தமிழ் வேங்கை

இலங்கைத்தீவு என்பது சீனாவுக்கு ஒரு தரிப்பிடம் மட்டுமே. சீனாவைத்
திருப்திப்படுத்தக்கூடியளவுக்கு இலங்கைத்தீவில் வளங்களோ அல்லது நுகர்வோரின்
எண்ணிக்கைப்பலமோ இல்லை. ‘புதினப்பலகை’க்காக ம.செல்வின்
சிறீலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இறுகிவரும் பொருளாதார மற்றும்
பாதுகாப்பு உறவுகள் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கநிலைக்கும் தேசிய
பாதுகாப்புக்கும் பாரிய சவாலாக உருவாகி வளர்ந்து வருகின்றது என்பதனை
புதுடெல்லியில் உள்ள அதிகாரக்கட்டமைப்பு தொடக்கம் சாதாரண இந்தியக் குடிமகன்வரை
அனைவரும் புரிந்துள்ளனர்.
இதே கருத்தினையே பூகோள அரசியற்போக்குகளினை தொடர்ச்சியாக
அவதானித்துவரும் பலதேசத்து அரசியல் ஆர்வலர்களும் கொண்டுள்ளனர்.
சிறீலங்காவின் ஆட்சியாளர்கள் தற்போது கையாளும் இருமுனை இராஜதந்திர
அணுகுமுறை 1948ல் பிரித்தானியரிடமிருந்து ஆட்சியதிகாரத்தினை கையேற்ற காலத்திலிருந்து
சிங்கள மக்களின் தேசியத்தலைவர்களால் தொடர்ச்சியாக வலுவூட்டப்பட்டு
வார்த்தெடுக்கப்பட்ட தூரநோக்கங்கொண்ட செயன்முறையாகும்.
இதனை மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான ஆட்சியின் கொள்கையாக மட்டும்
விளங்கிக்கொள்ள முயற்சிப்பது பொருத்தமற்றது.
பலமான எதிரியைக் கையாளுவதற்கு ‘எதிரியின் எதிரி எனக்கு நண்பன்’ என்கின்ற
அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற கூட்டான அரசியற்பலம் இன்றியமையாதது. இத்தகைய
எதிர்க்கூட்டணி அரசியல் மூலம் அச்சுறுத்த முற்படும் எதிரியை எதிர்கொண்டு
கையாளுவதற்கான பேரம்பேசும் பலம் சிறிய தேசங்களுக்கு கிடைக்கும்.
இந்தியா தொடர்பாக சிங்கள தேசமக்கள் கொண்டுள்ள விகாரமான மனப்பதிவு
மகாவம்சம் என்கின்ற நூலில் குறிப்பிடப்படும் வரலாற்றுச்சம்பவங்களுடன் தோற்றம்
பெறுகின்றது. காலங்காலமாக இந்தியாவின் மன்னர்களால் இலங்கைத்தீவின் மீது
நிகழ்த்தப்பட்ட படையெடுப்புக்கள் அதனைத்தொடர்ந்து வந்த சமய, கலாசார, பண்பாட்டு அழுத்தங்கள் ஆகியவை
இலங்கைத்தீவில் வாழ்ந்த மக்களின் [சிங்கள பௌத்தர்கள்] தனித்துவத்திற்கும்
அவர்களின் இறைமைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது, இருக்கின்றது,
எதிர்காலத்திலும் இருக்கும் என சிங்களமக்களும் அவர்களின் தலைமைகளும்
முழுமையாக நம்புகிறார்கள்.
எனவே பரந்த இந்தியாவின் அழுத்தத்திலிருந்தும்
அச்சுறுத்தத்திலிருந்தும் தங்களைப் பாதுகாப்பதற்காக இந்தியாவின் எதிர்சக்திகளுடன்
நட்புறவினை வளர்த்துக்கொண்டு தங்களது பேரம்பேசும் திறனை சிறீலங்காவின் தலைவர்கள்
கட்டியெழுப்பினார்கள். தற்போது சீனாவுடன் சிறீலங்கா கொண்டுள்ள உறவும் இதன்
தொடர்ச்சியேயாகும்.
சிறீலங்காவுக்கும் ஏனையநாடுகளுக்கும் இடையில் உள்ள உறவுகள் சிறப்பான
முறையில் புரிந்துகொள்ளப்படவேண்டும். இலங்கைத்தீவின் வரலாற்று மற்றும் பண்பாட்டு
செழுமைக்கு இந்திய உபகண்டம் பல பங்களிப்புகளை வழங்கியுள்ளது என்பதனை யாரும் மறுக்கமாட்டார்கள்.
சிங்கள மக்கள் தங்களின் பெருந்தந்தை எனக்கூறிக்கொள்ளும் விஜயனும்
அவனது 700 தோழர்களும் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு இலங்கைக் கரையில்
ஒதுங்கியவர்களே. அம் மண்ணில் வாழ்ந்த குவேனியினை மணந்து பின் வெறுத்தொதுக்கி
அவளையும் அவளுடன் தனக்குப்பிறந்த இரண்டு பிள்ளைகளினையும் காட்டிற்குள்
விரட்டிவிட்ட விஜயனுக்கும் அவனது தோழர்களுக்கும் தனது இளவரசியையும் தோழர்களையும்
வழங்கியது இந்தியாவின் பாண்டிய நாடுதான் என்பதனை சிங்களமக்களும் அதன்
வரலாற்றாசிரியர்களும் மறக்கவில்லை.
நேபாளத்தின் லும்பினிதேச அரசகுமாரனாக பிறந்து இந்தியாவின் பீகார்
மாநிலத்தில் புத்தகாய என இன்று அழைக்கப்படும் இடத்தில் ஞானமடைந்த கௌதமபுத்தரின்
போதனைகளையும் பௌத்த தர்மத்தினையும் இலங்கைக்கு அறிமுகஞ்செய்து வைத்ததும்
இந்தியாவிலிருந்து வந்த மகிந்தரும், சங்கமித்திரவும் அவரைத் தொடர்ந்தவர்களுமே.
இலங்கைத்தீவின் சிங்களமக்களின் பூர்வீகங்கள் யாவும் இந்தியாவையே
மூலமாக கொண்டுள்ளது என்கின்ற வாதம் ஏற்புடையதாக வரும்போது இந்தியாவுக்கும்
இலங்கைத்தீவின் சிங்கள பௌத்த மக்களுக்கும் இடையிலான நெருக்கம் வெளிப்படையான
தொப்புள்கொடி உறவாக உள்ளது.
சிறீலங்காவிற்கும் இந்தியாவின் எதிர்நிலைநாடுகளுக்குமான உறவு இதற்கு
முற்றிலும் எதிர்மாறானதே. சிறீலங்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஏனைய இஸ்லாமிய
நாடுகளுக்கும் இடையில் கட்டிவளர்க்கப்பட்டுள்ள உறவுகள் வெறும் பொருளாதார
இராஜதந்திர உறவுகளே.
உள்நாட்டினுள் வாழும் இஸ்லாமிய சமூகத்தின் மீதும் அவர்களது மார்க்க
உரிமைகளின் மீதும் அச்சுறுத்தலினை முன்னெடுத்துள்ள சிங்கள பௌத்த தேசியவாத சத்திகள்
இஸ்லாமியநாடுகளுடன் கொண்டுள்ள உறவுகள் வெறும் வலுச்சமனிலையினை தக்கவைப்பதற்கான
பந்தய விளையாட்டாகவே உள்ளது.
சீனாவுக்கும் இலங்கைக்குமான உறவை நோக்கும்போது அதுவும் ஒரு வலுச்சமனிலை
பந்தயமாகவே உள்ளது. சீனாவின் ஆட்சியாளர்கள் சிறீலங்காவை தங்களது நலன்களுக்கான
பகடைக்காயாகவே பயன்படுத்துகின்றனர்.
மாற்றமடைந்துவரும் பூகோள அரசியற்பொருளாதார உறவுநிலைகளுக்கும்
உலகத்தின் விரிந்த சந்தைப்போட்டிக்கும் ஈடுகொடுப்பதற்காக சீனா தன்னை
மாற்றிவருகின்றது. அதன்பொருட்டு சீனா உலகந்தழுவியதாக வளங்களினை வேட்டையாடும்
போட்டியில் இறங்கியுள்ளது. எண்ணெய்க்காகவும் கனிமவளங்களுக்காகவும்
முடிவுப்பொருட்களின் சந்தைக்காகவும் சீனாவின் கரங்கள் ஆபிரிக்க கண்டத்தின் இருண்ட
மூலைகள் யாவற்றையும் நோக்கி நீண்டுள்ளது.
இத்தகைய நிலையில் இலங்கைத்தீவு என்பது சீனாவுக்கு ஒரு தரிப்பிடம்
மட்டுமே. சீனாவைத் திருப்திப்படுத்தக்கூடியளவுக்கு இலங்கைத்தீவில் வளங்களோ அல்லது
நுகர்வோரின் எண்ணிக்கைப்பலமோ இல்லை.
தனது பொருளாதார நலன்களுக்கும் அப்பால் சென்று சிறீலங்காவினைக்
காப்பாற்றுமளவிற்கு சீனாவை தூண்டக்கூடிய வேறு பலமான அரசியற் பண்பாட்டுக்
காரணிகளும் இல்லை.
பெருந்தலைவர் மாவோவுடைய கம்யூனிச சித்தாந்தங்களினை பின்பற்றும்
கம்யூனிச அணிகளில் ஒன்றாகவும் சிறீலங்கா இல்லை.
சீனாவும் சிறீலங்காவும் பௌத்த தர்மத்தினைப் பின்பற்றும் மக்களினைப்
பெருமளவில் கொண்டிருந்தாலும் சீனாவில் பின்பற்றப்படும் மகாயான பௌத்தத்தையோ அதன்
துறவிகளையோ தனது நாட்டினுள் அனுமதிக்க சிறீலங்காவின் தேரவாதபௌத்தம் இடம்
தரப்போவதில்லை. எனவே தேவைப்படும்போது சீனா சூடான் நாட்டைக் கைவிட்டது போன்று
சிறீலங்காவையும் கைவிடுவதற்கான வாய்ப்புக்களை மறுப்பதற்கில்லை.
சீனாவுக்கான மூலவள கடற்போக்குவரத்து பாதையில் உள்ள தரிப்பிடங்களில்
ஒன்றாக சிறீலங்காவின் துறைமுகங்களும் அதன் ஆள்புல கடல் எல்லையும் தற்போது
முக்கியம் பெறுகின்றது. எனினும் கப்பல்கட்டும் பொறியியல் கண்டுள்ள
அபாரவளர்ச்சியும் பாரிய அளவு சரக்கு கொள்கலன்களினை நீண்ட தூரத்திற்கு காவக்கூடிய ‘Triple E’ வகையிலான கொள்கலன்கள் காவும் கப்பல்களின் அறிமுகமும் சிறீலங்காவின்
துறைமுகங்களின் தரிப்பிட முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும்.
மறுபுறத்தில் யுத்தஆயுத தயாரிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் நவீன
மாற்றங்களும் பாரிய விமானந்தாங்கிக் கப்பல்களும் ஏவுகணைகளின் பெருக்கமும் உளவுத்
தொழின்நுட்பத்தில் செயற்கைக்கோள்களும் ஆளில்லா உளவுவிமானங்களும் ஏற்படுத்தியுள்ள
அதியுயர் சாதனைகளும் எதிரியின் கொல்லைப்புறத்திற்கு நெருக்கமாக தளம்தேடும்
தேவையினை இல்லாது ஒழித்துள்ளது. எனவே இந்தியாவை உளவறிவதற்காக சீனா சிறிலங்காவில்
கால் ஊன்றவேண்டி உள்ளது என்ற வாதம் கேளவிக்கு உட்படுத்தப்படவேண்டும்.
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பலமுனைப் போட்டியுள்ளது. இரண்டு
தேசங்களுக்கும் இடையிலான எல்லைகள் அதனோடிணைந்த பிரதேசங்கள் தொடர்பாக கடந்த
காலத்தில் இருநாடுகளும் போரிட்டன. இன்றுவரை எல்லைப்பிரச்சனை தீர்க்கப்படாமல்
இருந்தாலும் இன்னுமொரு யுத்தத்தில் சந்திப்பதை இரண்டு நாடுகளுமே தவிர்த்து
வருகின்றன என்பதுவே உண்மை. ஏனெனில் யுத்தத்தில் பிரவேசிப்பதன் மூலம் தாங்கள்
அடைந்துள்ள பலதுறை மேம்பாடும் கட்டுமானங்களும் அழிக்கப்படுவதை விருப்பவில்லை.
மற்றோரு முனையில் எண்ணெயும் எரிவாயு வளமும்கொண்ட தென்சீனக்கடலின் மீது
பலநாடுகள் கொண்டிருக்கும் உரிமை மீதான போட்டியினுள் இந்தியாவும் பிரவேசித்துள்ளது.
சீனாவின் அண்டைநாடான வியட்னாம் நாட்டுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ்
தென்சீனக்கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆராய்ச்சியிலும் அகழ்விலும் இந்தியா
ஈடுபட்டுள்ளது. இது சீனாவுக்கும் இந்தியாவுக்குமான புதிய முரண்பாட்டு முனையாக
மாறியுள்ளது.
தென்சீனக்கடலில் எண்ணை அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களின்
கப்பல்களுக்கு சீனாவின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக
தேவைப்படின் இந்திய கடற்படைக்கப்பல்கள் அத்திசை நோக்கி நகரும் என இந்திய
கடற்படைத்தளபதி அண்மையில் கருத்து உரைத்திருந்தார்.
வியட்னாம் ஊடாக சீனாவின் கொல்லைப்புறத்தினுள் இந்தியா செல்வதும்
சிறீலங்காவின் ஊடாக இந்தியாவின் தென்முனைக் கொல்லைக்குள் சீனா உள்வருவதும்
வல்லரசுகளின் வலுச்சமனிலை விளையாட்டின் ஒரு நிலையே. ஆனால் இவையெல்லாம் சதுரங்க
ஆட்டத்தில் முன்னும் பின்னும் நகர்த்தப்படும் காய்களே. இரண்டு வல்லரசுகளும் தமது
நலன்களுக்காக சமரசம் செய்ய முற்படும்போது சிறியதேசங்களும் அவற்றின் நலன்களும்
பலிக்கடாவாக்கப்படுகின்றது.
“சீனாவின் ஆதிக்கம் சிறீலங்காவின் தென்பகுதி
துறைமுகங்களினூடாக விரிவாக்கம் செய்யப்படும்போது அது இந்தியாவின் தேசிய
பாதுகாப்பிற்கும் பொருண்மிய நன்மைகளுக்கும் ஆபத்தாக மாறும். அத்தகைய நிலை விரைவில்
ஏற்படும். அப்போது இந்தியா சீனாவின் விரிவாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்காக
இலங்கைத் தீவை கூறுபோடுவதனூடாக சிங்கள சிறீலங்கா, தமிழீழம்
என்கின்ற இரண்டு தேசங்கள் விரைவில் உருவாகும். தமிழீழ தேசம் இந்தியாவின்
தென்முனையில் அதன் பாதுகாப்பு அரணாக இருக்கும்” என்ற
வாதங்கள் தற்போது வைக்கப்படுகின்றன.
இத்தகைய வாதம் பல வினாக்களை எம்மிடையே தோற்றுவிக்கின்றது. மேற்கூறிய
வாதத்தின் படியே சீனாவின் விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கைத்தீவினை
இந்தியா இரண்டாக கூறுபோடுமானால் நிச்சயமாக ஒரு நாடு [தமிழீழம்] இந்திய சார்பு
நாடாகவும் மற்றைய நாடு [சிறீலங்கா] நிரந்தரமாக இந்திய எதிர்ப்பு நாடாகவும் மாறி
சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளும்.
அத்தகைய நிலையில் சிறீலங்கா தனது வடக்கு எல்லையில் மன்னாருக்கு கீழ்
சீனாவுக்காக நிரந்தர தளவசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும். இதனால் இந்திய தென்முனை
தரை எல்லையிலிருந்து 165 கிலோ மீற்றர் தொலைவுக்குள் இருந்து சீனாவின்
உளவறியும் தொழின்னுட்பம் செயற்படும். இத்தகைய நிலைமையை இந்தியா
விரும்பப்போவதில்லை.
அமெரிக்கா வல்லரசுக்கு சவால்விட்ட கியூபா தேசம் போல் சிறீலங்கா இருக்க
இந்தியா அனுமதிக்காது. மாறாக முழு இலங்கைத் தீவிற்கும் வெளியே சீனாவை தள்ளுவதன்
மூலம் தென்முனையில் 4000 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் சீனாவின் இருப்பை
உறுதிசெய்துகொள்ளவே இந்தியா தயாராகும்.
அக்குறிக்கோளினை அடைவதற்கு இந்தியாவிற்கு உள்ள ஒரேயோருவழி
சிறீலங்காவினை தனது நட்பு நாடாக வைத்துக்கொள்வதே. அண்மையில் இந்திய தளபதியின்
சிறீலங்கா சுற்றுப்பயணத்தின்போது சிறீலங்காவின் அதி உயர் இராணுவபீடத்தினர் காட்டிய
பணிவுமிகு வரவேற்பு அவர்களுக்கிடையில் இருக்கின்ற ஆத்மார்ந்த நட்புறவினை
பிரதிபலித்தது.
ஆகவே சிறீலங்காவுடன் பலவிதமான விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய இந்தியா
முன்வரும். அத்தகைய பேரம்பேசலின்போது சிறீலங்கா சீனாவுடனான நெருக்கத்தைக்
பெரிதுபடுத்திக்காட்டுதல் ஊடாக அதிக நன்மைகளை இந்தியாவிடமிருந்து
பெறமுயற்சிக்கும்.
அப்போது மீண்டும் ஒருமுறை ஈழத்தமிழர்களும் அவர்களின் உரிமைகளும்
நலன்களும் இந்தியா என்கின்ற வல்லாதிக்க சக்தியால் சிறீலங்காவின் பீடத்தில்
பலிகொடுக்கப்படும். இந்த தர்க்கவியல் உண்மையைப் புரிந்துகொள்ளாமல் வாதங்களை
முன்வைப்பது ஈழத்தமிழர்களை ஏமாற்றும் மற்றுமொரு முயற்சியாகவே அமையும்.
![]() |