தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


வடதமிழீழத்திலிருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியமைக்காக ஒப்பாரி வைக்கும் முஸ்லிம் தலைவர்களும், எழுத்தாளர்களும் தென்தமிழீழத்தில் முஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, நான்கு இலட்சம் தமிழர்கள் குடிபெயர்க்கப்பட்டமை பற்றி மட்டும் மௌனம் சாதிப்பதில்லை: முஸ்லிம்களை வெளியேற்றும் தற்காலிக
முடிவை தமிழீழத் விடுதலைப் புலிகள் எடுத்ததற்கான பின்னணி பற்றியும் அவர்கள் ஆராய்வதில்லை.

உண்மையில் வடதமிழீழத்திலிருந்து சகல முஸ்லிம்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியதாகக் கூறிவிட முடியாது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக நின்ற இஸ்லாமிய தமிழ்க் குடும்பங்கள் தொடர்ந்தும் வடதமிழீழப் பகுதிகளில் வசிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுமதிக்கப்பட்டன. இதேபோன்று இஸ்லாமிய தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த குறிப்பிடத்தக்க போராளிகளும், அவர்களின் குடும்பங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருந்த வடதமிழீழப் பகுதிகளில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருந்த இஸ்லாமியத் தமிழ்க் குடும்பம் ஒன்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக தமது இரண்டு பிள்ளைகளை அர்ப்பணித்தது. இவர்களில் ஒருவர் 1998ஆம் ஆண்டு ஜெயசிக்குறுய் எதிர்ச்சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். லெப். தரத்தைச் சேர்ந்த இவ் இஸ்லாமியத் தமிழ்ப் போராளியின் சகோதரர் ஒருவர் 2009ஆம் ஆண்டு வன்னிப் போர்க்களத்தில் வீரச்சாவை அணைத்துக் கொண்டார். இப்போராளிக்கு லெப்.கேணல் தரம் வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகள் மதிப்பளித்தனர்.

இவ்விரு இஸ்லாமியத் தமிழ்ப் போராளிகள் மட்டுமன்றி இவர்களின் முழுக் குடும்பத்தினருமே தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பக்கபலமாக நின்று இறுதிவரை செயற்பட்டனர். இவர்கள் மட்டுமன்றி தமிழ்ப் பெண்களை மணம்முடித்த முஸ்லிம் ஆண்களும், தமிழ் ஆடவர்களை திருமணம் முடித்த முஸ்லிம் பெண்களும் கூட தமது குடும்பத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

வடதமிழீழத்திலிருந்து ஏனைய முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியதற்காகக் கூக்குரல் எழுப்புபவர்கள் இன்னுமொரு விடயத்தை மறந்து விடுகின்றார்கள். 11.06.1990 அன்று இரண்டாம் கட்ட ஈழப்போர் வெடித்த பொழுது வடதமிழீழத்தில் மொத்தம் அறுபதுனாயிரம் முஸ்லிம்கள் வசித்து வந்தனர். இவர்களில் ஏறத்தாள முப்பதுனாயிரத்திற்கும் அதிகமானவர்கள் போர்மூண்ட ஓரிரு வாரங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை விட்டு சுயதெரிவின் பேரில் வெளியேறி கொழும்பில் குடியேறிக்கொண்டார்கள்.

இதன்பின் தென்தமிழீழத்தில் தமிழர்களுக்கு எதிரான முஸ்லிம்களின் வெறியாட்டங்கள் அதிகரித்ததோடு இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, நான்கு இலட்சம் தமிழர்கள் குடிபெயர்க்கப்பட்டனர். இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து மட்டும் எண்பதுனாயிரம் தமிழர்கள் முஸ்லிம்கள் காடையர்களாலும், ஊர்காவல் படையினராலும் அடித்து விரட்டப்பட்டனர். வடதமிழீழத்திலிருந்து வெறும் முப்பதுனாயிரம் முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியதற்காக ஓலமிடுபவர்கள், தென்தமிழீழத்திலிருந்து முஸ்லிம்களால் அடித்து விரட்டப்பட்ட நான்கு இலட்சம் தமிழர்கள் பற்றி அதிலும் அம்பாறையிலிருந்து விரட்டப்பட்ட எண்பதுனாயிரம் தமிழர்கள் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

03.08.1990 அன்று காத்தான்குடி பள்ளிவாசலில் 103 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிக் கதறுபவர்கள், 05.09.1990 அன்று மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த ஏதிலிகள் முகாமில் வைத்து சிங்களப் படைகளாலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் 142 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் ஆறு இளைஞர்கள் ரயர் போட்டு உயிருடன் எரிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதேபோன்று 11.09.1990 அன்று மட்டக்களப்பு தண்ணாமுனை, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் ஆகிய கிராமங்களில் ஒரு நாளில் சிங்கள முஸ்லிம் ஊர்காவல் படையினரால் பச்சிளம் குழந்தைகள் உட்பட 217 தமிழர்கள் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்டமை பற்றியும் இந்த அனுதாபிகள்கவலைப்பட்டதில்லை.

தென்தமிழீழத்தில் தமிழர்கள் மீது முஸ்லிம்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுஞ்செயல்களில் மிகவும் கீழ்த்தரமான இன்னுமொரு சம்பவத்தை இங்கு பதிவு செய்வது அவசியமாகின்றது. இச்சம்பவம் நடைபெற்றது அம்பாறை கல்முனைப் பகுதியில். கல்முனையில் சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்ட பதினான்கு அகவையுடைய தமிழ்ச் சிறுமி ஒருவர் படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் படை முகாமிலிருந்து இச்சிறுமியை இழுத்துச் சென்ற முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிறுமியை நிர்வாணப்படுத்தி, கல் ஒன்றை வீதியில் நட்டு அதனைச் சுற்றிவருமாறு அவரை நிர்ப்பந்தித்தனர். இதன் பின்னர் அச்சிறுமியை கற்களால் எறிந்து படுகொலை செய்த முஸ்லிம் ஊர்காவல் படையினர், ‘இஸ்லாமிய மார்க்கத்தில் விபச்சாரிக்குரிய தண்டனை இதுதான்என்று கூறி சிறுமியின் உடலை வீதியில் விட்டுச் சென்றனர்.

இவ்வாறு தென்தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான மிக மோசமான வன்முறைகளை முஸ்லிம்கள் கட்டவிழ்த்துவிட்டதால் வடதமிழீழத்தில் அப்பொழுது பதற்றமான சூழல் தோற்றம்பெற்றிருந்தது. இதே நிலை தொடர்ந்தால் வடதமிழீழத்தில் தமிழ்-முஸ்லிம் கலவரம் வெடிப்பதற்கான அறிகுறிகள் கூடத் தென்பட்டன. இந்நிலையில் தென்னிலங்கையிலிருந்து வவுனியா ஊடாக வடதமிழீழத்திற்கு வந்த ஒரு தொகுதி முஸ்லிம் வணிகர்களின் பார ஊர்திகளில் பெரும் தொகையில் வாட்களும், ஏனைய ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டமை தமிழீழ விடுதலைப் புலிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

முஸ்லிம் ஊர்காவல் படையினரையும், முஸ்லிம் காடையர்களையும் பயன்படுத்தி தென்தமிழீழத்தில் குழப்பம் விளைவித்து தனது நில ஆக்கிரமிப்பை அங்கு கனக்கச்சிதமாக சிங்களம் அரங்கேற்றியிருந்த நிலையில் இதே நிலை வடதமிழீழத்திலும் ஏற்படும் அபாயத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்நோக்கியிருந்தனர். அப்பொழுது தமிழீழக் காவல்துறை என்ற சட்டம்-ஒழுங்கு பேணும் கட்டமைப்பு தோற்றம் பெற்றிருக்கவில்லை. தமது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளே சட்டம்-ஒழுங்கைப் பேணும் பணியையும் ஆற்றி வந்தனர்.

ஒருபுறம் வடதமிழீழத்தில் ஆங்காங்கே காணப்பட்ட சிங்களப் படை முகாம்களை முற்றுகைக்குள் வைத்தவாறு மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெடிக்கக்கூடிய தமிழ்-முஸ்லிம் கலவரங்களை தடுத்து நிறுத்துவது என்பது அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விடயமாக இருந்தது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதியும், தமிழ் மக்களின் பாதுகாப்புக் கருதியும் வடதமிழீழத்தில் தங்கியிருந்த முப்பதுனாயிரம் முஸ்லிம்களை வெளியேற்றும் முடிவு 1990ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது.

உண்மையில் முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றினார்கள் என்று கூறுவதைவிட அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தார்கள் என்று கூறுவதே பொருத்தமானது. இருந்தும்கூட 1994ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்ட பொழுது, வடதமிழீழத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு அழைப்பதற்கான முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் எடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததால் இம்முயற்சி கைகூடாது போனதோடு, 1995ஆம் ஆண்டின் இறுதியில் யாழ்ப்பாணத்தை சிங்களப் படைகள் கைப்பற்றியதை தொடர்ந்து இதற்கான தேவையும் இல்லாது போனது.

இன்று புத்தளத்திலும், ஏனைய இடங்களிலும் வசிக்கும் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறுவதற்கான வாய்ப்பு 1996ஆம் ஆண்டிலேயே ஏற்பட்டிருந்தது. ஆனால் அதனைப் பயன்படுத்தாது அகதி முகாம்களில் முஸ்லிம்களை தொடர்ந்தும் முடக்கிவைத்து அரசியல் ஆதாயம் தேடுவதிலேயே முஸ்லிம் தலைமைகள் குறியாக உள்ளன. 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகியதை தொடர்ந்து வன்னியில் முஸ்லிம்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய ஒரு தொகுதி இஸ்லாமிய தமிழ்க் குடும்பங்கள் வன்னியில் மீண்டும் வந்து குடியேறின.

இவ்வாறு தென்தமிழீழத்தில் முஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதையும், நான்கு இலட்சம் தமிழர்கள் குடிபெயர்க்கப்பட்டதையும் கடந்த காலத்தின் கசப்பான நிகழ்வுகளாக புறந்தள்ளிவிட்டு இஸ்லாமிய தமிழர்களுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை எடுத்த முயற்சிகளை, வடதமிழீழத்திலிருந்து வெறும் முப்பதுனாயிரம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். காத்தான்குடி பள்ளி வாசலில் 103 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்காக ஆண்டு தோறும் நினைவு விழா எடுப்பவர்கள், 02.02.1976 அன்று சிறீலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட 7 இஸ்லாமியத் தமிழர்களுக்காகவும் நினைவு விழா எடுப்பது நல்லது.

கூடவே முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்ட இரண்டாயிரம் தமிழர்களையும் நினைவுகூர்வது இன்னும் சாலச்சிறந்தது. இப்பத்தியின் கடந்த தொடர்களில் நாம் குறிப்பிட்டமை போன்று கொழும்பையும், கண்டியையும் மையமாகக் கொண்டு இயங்கி வரும் சாவக-ஹம்பேய முஸ்லிம்களிடம் தமது அரசியல் எதிர்காலத்தை அடகுவைத்து சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு பலிக்கடா ஆவதை விடுத்து தமிழீழத் தேசத்தின் இணைபிரியா அங்கமாக தம்மை இணைத்துக் கொள்வதே தமது அரசியல் எதிர்காலத்திற்கும், இருப்பிற்கும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதை இஸ்லாமியத் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதுதான் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இஸ்லாமியத் தமிழ் மாவீரர்களுக்கும், சூரியக்கதிர் நடவடிக்கையின் பொழுது ஐந்து இலட்சம் தமிழர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாது தனக்குத்தானே தீமூட்டு ஈகச்சாவைத் தழுவிக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த வீரத்தமிழ்மகன் அப்துல் ரவூப் என்ற இஸ்லாமிய தமிழ் மாவீரனுக்கும் தமிழீழத்தின் இஸ்லாமியர்கள் ஆற்றக்கூடிய கடமையாகும்.

அவ்வாறு அல்லாது போனால் ரிசானாவை சவூதியில் வாளுக்கிரையாக்குவதற்கு துணைநின்ற சிங்களம் இதேநிலையையே ஏனைய இஸ்லாமிய தமிழர்களுக்கும் ஏற்படுத்தும். அப்பொழுது இஸ்லாமிய தமிழர்களுக்காக எந்தவொரு முஸ்லிம் நாடும் கைகொடுக்கப் போவதில்லை. வேண்டுமானால் இஸ்லாமிய தமிழர்களுக்கு நோன்பு நாட்களில் பேரிச்சம்பழங்களை அரபு முஸ்லிம்கள் அனுப்பிவைக்கக்கூடும்.

ஆனால் இஸ்ரேலியர்களால் விரட்டியடிக்கப்பட்ட பலஸ்தீன முஸ்லிம்களையே தமது நாடுகளில் குடியமர விடாது அகதி முகாம்களில் முடக்கி வைத்து, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த குர்து இன மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்கும் அரபு முஸ்லிம்கள், இஸ்லாமிய தமிழர்கள் மீது தனது கொலைவாளை சிங்களம் திருப்பும் பொழுது துணைக்கு வரப்போவதில்லை. இதுதான் ரிசானாவின் படுகொலை சொல்லும் செய்தி.

நன்றி : ஈழமுரசு





Del6115515

Sri Lankan Muslims take part in a protest against the planned relocation of a mosque after congregational Friday prayers in Colombo on April 27, 2012. Sri Lanka's government has advised the trustees of a 60-year-old Muslim mosque north of the capital to relocate the structure after angry protests by Buddhist monks. AFP PHOTO/ LAKRUWAN WANNIARACHCHI        (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/GettyImages) 2012 AFP

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -