தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் அதற்கு முன்னைய காலங்களிலும் வாழ்ந்த யாழ்ப்பாணத்துப் பழங்குடி மக்களது வாழ்வியல்புகளில் பனை வர்தக பாடம் இன்றும் என்றும் நினைவு கூரத்தக்கதாகும். அவ்வாறு நினைவு கூருதல் இன்றைய காலத்தின் தேவையாகும். அன்றெல்லாம் மக்களது
குடியிருப்புக்கள் அனைத்தும் பனந்தோப்புகளில் பனை ஓலைகளால் வேயப்பட்டவையாக இருந்துள்ளன. இந்தக் குடியிருப்புக்களை அமைக்க வேண்டிய மரங்கள் வளைகள் சலாகைகள் அனைத்தும் பனையிலிருந்து பெறப்பட்டவையாகும்.

கடுங்கோடை காலத்திலும் சரி மாரி காலத்திலும் சரி பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளில் மக்களை மிக மிக இதமான சுவாத்தியத்தில் வாழ்ந்துள்ளனர். வெப்பமோ அன்றிக் குளிரோ அவர்களை அன்று பாதித்ததில்லை

மக்கள் பனை ஓலைகளால் இழைக்கப்பட்ட பாய்களிலேயே படுத்துறங்கினர். அதே பாய்கள் தான் குழந்தைப்பிள்ளைகள் உறங்கவைப்பதற்கும் மருத்தெண்ணெய் பூசிக் கிடத்துவதற்கும் உதவின. வைபவகாலங்களில் விருந்தினர்களை அமரச் செய்து உபசரிப்பதற்கும் வர்ணவர்ண ஓலைப்பாய்களையே மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

பனை ஓலைப்பாய்களின் தேவை மிகமிகப் பெரிதாக உணரப்பட்ட அந்தக் காலத்தில் தமது விளைபொருட்களான சாமி குரக்கன் கதிர்களை பென்னம் பெரிய கதிர்ப்பாய்களிலேயே மக்கள் உலரவைத்தனர். எள்ளு, பயிற்றம் நெத்துக்களையும், மரவள்ளிச் சீவல்களையும் காயப்போடுவதற்கும்இக்கதிர்ப்பாய்களே அன்று உபயோகத்திலிருந்துள்ளன. நடந்தும் கொட்டகைகளில் மக்கள் செளகரியமாக இருந்து கூத்துக்களை இரசிப்பதற்கும் அந்தக் காலத்தில் ஆசன வசதிகள் எவையுமே இருந்ததில்லை. நிலத்தில் கதிர்ப்பாய்களில் உல்லாசமாக அமர்ந்தே அந்தக் காலத்தில் குடாநாட்டு மக்கள் கண்டு களித்துள்ளனர்.

ஓலைதந்த பண்டங்கள்

வீடுகள் தோறும் பனை ஓலை பனம் ஈர்க்கில் கொண்டு பின்னப்பட்ட எண்ணில்டங்கா பொருட்களையும் மக்கள் பாவித்துள்ளனர். பனை ஓலையால் பின்னப் பட்ட பாரிய கூடைகளிலேயே ஒடியல் புளுக்கொடியல் முதலியவற்றைச் சேமித்தனர். சாமி குரக்கன்வரகு நெய் மரவள்ளிச் சீவல்களும் சேமித்து வைப்பதற்கு பாரிய பனை ஓலைக் கூடைகளே பயன்படுத்தப்பட்டன. இக் கூடைகள் கறையான் பிடிக்காமல் இருப்பதன் பொருட்டு வீடுகள் தோறும் பனைமரத்திலான கோர்க்காலிகள் இருந்துள்ளன. அன்று மக்கள் பாவித்த பெட்டிகள், கடகங்கள், நீற்றுப்பெட்டிகள், திருகனைகள், உறிகள், இடியப்பத்தட்டுக்கள், சுளகுகள், பனக்கட்டிக் குட்டான்கள் திருநூற்றுக் குட்டான்கள், தொப்பிகள், நீர் இறைக்கப்பட்டைகள் பாட்டிமாரின கொட்டைப் பெட்டிகள் ஆதியாம் பொருட்கள் அனைத்தும் பனை ஓலை அல்லது பனை ஓலை ஈர்க்குக்களால் உருவாக்கப்பட்டவையே எனலாம். பனை ஓலையின் பயன்பாடுகள் இன்னும் மிக நீளமானவை. ஏடுகளை எழுதவும் அன்று பனை ஓலைகளே பயன்பட்டன. கடற்கரையோரங்களில் வாழ்ந்த மீனவக் குடும்பங்கள் பயன்படுத்திய மீன் பறிகள், கூடைகள் அனைத்தும் பனையோலையிலானவையே எனலாம்.

கடல் அரிப்பை தடுக்க

கரையோரப்பனங்கூடல்கள் கடல் அரிப்பைத் தடுக்கவல்லனவாகவும் விளங்கின. பெரிய புயல்களையும் புயல் காற்றுக்களையும் தடுக்கும் வல்லமை பனங்கூடல்களுக்குண்டென்பதும் பண்டைக்காலம் குடாநாட்டு மக்களது அனுபவமாக உணரப்பட்டிருந்தது.

பனையோலைப் பாயும் பாணிப் புகையிலையும்

குடாநாட்டிற்கும் மலையாளத்திற்கும் இடையில் நேரடியாக வியாபாரம் இடம்பெற்ற அந்தக் காலத்தில் பெரிய எடுப்பில் குடாநாட்டுப் பாணிப்புகையிலை பாரிய வந்தைகள் மூலம் மலையாளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பனை ஓலைப்பாய்களிளும் பாணிப்புகையிலை சிப்பங்களாகக கட் டப்பட்டே அனுப்பப்படுவது அன்றைய நடைமுறையாகும். இன்றும் குடாநாட்டிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு புகையிலையை பனையோலைப்பாய்ச்சிப்பங்களாகவே கட்டி அனுப்பப்படுவதும் வழமையாகவுள்ளது.

சாதகங்கள்

மக்களது சாதகங்களைச் சாந்திரிமார்கள் பனை ஓலைச் சுவடிகளாகவே எழுதிவைத்தனர்.

வாகடங்கள்

ஆயுள் வேத வைத்தியர்களது வாகடங்களும் எழுதிப் பேணப்பட பனை ஓலைகளே பயன்பட்டன. இன்றும் மிகப்பழைய ஆயுள் வேத வாகடங்களைப் பனையோலை ஏட்டுச்சுவடிகளாகவே பார்க்கமுடியும்.

பசுக்களின் உணவு பனை ஓலை

குடாநாட்டுமக்கள் பட்டிபட்டியாகப் பசுக்களை வளர்ந்த அந்தக்காலத்தில் அப்பசுக்களின் பிரதான உணவு பனை ஓலைகளாகவே இருந்துள்ளன. பனை ஓலைகளை உணவாகக் கொண்ட பசுக்களின் பால் அதிக தடிப்பும் சுவையும் மிக்கதாகும். இது அடியேனது அனுபவமும் கூட பனந்தோப்புக்களில் குரும்பைகளும் கறவைப் பசுக்களுக்கு அந்தக் காலத்தில் சத்துணவாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.

பசுத்தொட்டில்களுக்கும் பனை மரங்களும் பனைஓலைகளுமே பயன்பாட்டில் இருந்தன. பனைஓலைக்குடிசைகளில் வாழ்ந்த மக்கள் தமது வேலிகளை அடைக்கப்பனை ஓலைகளையும் பனைபட்டைகளையும் பயன்படுத்தினர். புதிதாக வீடு வேயும் பொழுது கழற்றி விடப்படும் பழைய ஓலைகள் அனைத்தும் விளைநிலங்களில் V.ஜி பசளைக்காகப் புதைக்கப்பட்டன.

குடாநாட்டில் ஆட்டுக்கடா வேள்விகள் பிரபல்யமாக நடைபெற்ற அந்தக் காலத்தில் பங்கு இறைச்சிகள் பச்சைப் பனைஓலைகளிலேயே பொதிசெய்யப்பட்டன. பனம் மட்டை, பாளை, கொக்காறை, பனம் ஊமல் முதலியவற்றை மக்கள் தமது எரிபொருட் தேவைகளுக்குப் பயன்பயன்படுத்தினர்.

பனைதந்த உணவுகள்

யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் உணவுத் தேவையில் கணிசமான ஒரு பகுதியை நாள்தோறும் அன்று பனைகளே பூர்த்தி செய்துள்ளன. பனம் பழங்களை அன்று மக்கள் பெரிதும் விரும்பிப் புசித்து வாழ்ந்துள்ளனர். பனம் பழச்சாற்றிலிருந்து பெறப்பட்ட பனாட்டும் மக்களின் உணவாக இடம்பிடித்துக் கொண்டது. ஒடியற் கூழ் ஒடியற்பிட்டு ஒருநேர முக்கிய உணவாகக் கருதப்பட்ட அந்தக் காலத்தில் கடல் உணவு அதாவது சிறுமீன்கள் கலந்து அவித்த ஒடியற்பிட்டை அசைவர்கள் அமிர்தமாகவும் கொண்டனர். பனம் வளவுகள் இல்லாதவர்கள் உள்ளவர்களிடம் பனம் பழங்களே வாங்கிப் புசித்த அந்நாட்க ளில் புசித்தபின் விதைகளைத் நிருப்பிக் கொடுக்கவேண்டிய கட்டாயநிர்ப்பந்தமும் அந்தக் காலத்தில் இருந்துள்ளது. ஒவ்வொரு பனம் பழத்திற்கும் அந்தக் காலத்தில் அவ்வளவு மதிப்பிருந்தது என்பதை உணர்ந்துகொள்ளலாம். அக்காலத்தில் நாடகங்களில் வரும் நகைச்சுவை நடிகர்கள் காலிப் பனங்காயைத் தின்னுங்கோ கண்ட இடமெல்லாம் கழியுங்கோஎனப்பாடும் பொழுது மக்கள் கொல்லென்று சிரிப்பார்களாம்.

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -