அண்மையில் இலங்கைக்கு வந்து சென்ற சோயு குய்ங், சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சின் உதவி
அமைச்சராவார். 1983ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சு,
சீனாவின் வெளியகப் புலனாய்வு பணிகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்பு
மட்டுமல்ல, சீனாவுக்குள்ளேயும் சக்தி வாய்ந்த ஒன்று. சீன
உதவி அமைச்சர் தலைமையிலான குழுவின் பயணம் இடம்பெற்றதை வெளிப்படுத்தியுள்ள போதிலும்,
எதற்காக அவர்கள் வந்தனர் என்று வெளிப்படுத்தாததன் மூலம் பலரது
தலைமைப் பிய்க்க வைத்துள்ளது இலங்கை அரசாங்கம். காரணம் சீனாவின் அரச பாதுகாப்பு
அமைச்சு என்பது சீனாவின் மிக முக்கியமானதொரு அமைப்பு.
இதன் கட்டளை அமைப்பில் இரண்டாம் நிலையில்
உள்ள அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருப்பதை, இந்தியா,
அமெரிக்கா போன்ற இலங்கை மீது ஆர்வமுள்ள நாடுகளால் இலகுவாக எடுத்துக்
கொள்ள முடியாது. இலங்கை – சீன நெருக்கம் இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்த போதிலும்,
அதை இலங்கை திரும்பத் திரும்பச் செய்து வருவது தான் ஆச்சரியம். என
குறிப்பிடும் சுபத்ரா,
தனது விரிவான ஆய்வில்,
கடந்தவாரம் சீனாவின் உதவி அரச பாதுகாப்பு
அமைச்சர் சோயு குய்ங் இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த ஆண்டு
சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெனரல் லியாங் குவாங்லி, இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தை அடுத்து, இலங்கைக்கு
வந்த சீனாவின் உயர்நிலைப் பாதுகாப்பு அதிகாரி இவரேயாவார்.
சீனாவின் உதவி அரச பாதுகாப்பு அமைச்சர்
சோயு குய்ங்கிற்கு இலங்கை அரசாங்கம் அதிகளவு முக்கியத்துவம் கொடுத்திருந்த போதும்,
அவர் யார் என்பது ஊடகங்களால் சரியாக அடையாளம் காணப்படவில்லை.
இவர் முதலில் திருகோணமலைக்குச் சென்று
இரண்டு நாட்கள் தங்கிருந்தார்.
அங்கு இலங்கைக் கடற்படையின் கிழக்குத்
தலைமையகம் அமைந்துள்ள டொக்யார்ட்டில், அதிகாரிகளுடன்
ஆலோசனைகளில் ஈடுபட்டதுடன், கடற்படை அருங்காட்சியகத்தையும்
பார்வையிட்டிருந்தார்.
திருகோணமலைத் துறைமுகத்தை படகில்
முற்றுமுழுதாக ஆய்வு செய்த அவர், சீனக்குடா விமானப்படைத்
தளத்தையும் பார்வையிட்டு, விமானப்படை அதிகாரிகளுடன்
பேச்சுக்களை நடத்தியிருந்தார். சீனக்குடா என்ற பெயருக்கும் சீனாவுக்கும் எந்தத்
தொடர்பும் இல்லாத போதிலும், சோயு குய்ங்கின் இந்தப் பயணம்
சீனக்குடாவுக்கும் சீனாவுக்கும் இடையில் புதிய முடிச்சுகளைப் போடுவதற்கான
பிள்ளையார் சுழியாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
வான்புலிகளை எதிர்கொள்ள சீனா கொடுத்த
முப்பரிமாண ரேடர் இங்கு தான் நிறுவப்பட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில்,
புலிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கு இலங்கை விமானப்படையிடம் உள்ள
சீனாவில் தயாரிக்கப்பட்ட எவ்-7 ஜெட் போர் விமானங்கள்
சீனக்குடாவில் தான் நிலை கொண்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலைக் கடற்படைத் தளத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பயன்படுத்திய கரும்புலித்
தாக்குதல் படகையும், சீன உதவி அமைச்சர் சோயு குய்ங்
பார்வையிட்டிருந்தார். (சீன உதவிப்பாதுகாப்பு அமைச்சரை வியக்க வைத்த கரும்புலிப்
படகு )அதன் பின்னர், விமானத்தில் பலாலிக்குச் சென்ற சீன உதவி
அமைச்சருக்கு அங்கும் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ்.படைகளின் கட்டளைத்தளபதி
மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் சோயு குய்ங் மற்றும் ஆறு அதிகாரிகளும்
பேச்சுக்களை நடத்தியிருந்தனர். பின்னர் விமானப்படை ஹெலிகொப்டரில் யாழ்.கோட்டைக்கு
சென்று பார்வையிட்ட அவர்கள் கொழும்பு திரும்பி பாதுகாப்புச் செயலர் கோத்தாபய
ராஜபக்சவைச் சந்தித்துப் பேசியிருந்தனர்.
இருதரப்பு ஆர்வமுள்ள விவகாரங்கள் குறித்து
பேசப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், உண்மையில் என்ன
பேசப்பட்டது, எதற்காக சீன அமைச்சர் இலங்கை வந்தார் என்ற
விபரங்கள் ஏதும் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. அவர் எப்போது வந்தார்,
எப்போது திரும்பினார் என்ற விபரங்களைக் கூட இலங்கை
பாதுகாப்புத்தரப்பு வெளிப்படுத்தவில்லை.
ஆனால், ஒரு விடயத்தைக்
கவனிக்க வேண்டும், இந்தப் பயணத்தை இலங்கை அரசாங்கம்
நினைத்திருந்தால் இரகசியமாகப் பேணியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
அதற்குக் காரணம் உள்ளது.
சீன உதவி அமைச்சர் தலைமையிலான குழுவின்
பயணம் இடம்பெற்றதை வெளிப்படுத்தியுள்ள போதிலும், எதற்காக
அவர்கள் வந்தனர் என்று வெளிப்படுத்தாததன் மூலம் பலரது தலைமைப் பிய்க்க வைத்துள்ளது
இலங்கை அரசாங்கம். காரணம் சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சு என்பது சீனாவின் மிக
முக்கியமானதொரு அமைப்பு. இதன் கட்டளை அமைப்பில் இரண்டாம் நிலையில் உள்ள அமைச்சர்
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருப்பதை, இந்தியா, அமெரிக்கா போன்ற இலங்கை மீது ஆர்வமுள்ள நாடுகளால் இலகுவாக எடுத்துக் கொள்ள
முடியாது.
சீனாவின் பாதுகாப்புக் கட்டமைப்பை
விளங்கிக் கொள்ளாமல், இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை
வெளிப்படுத்துவது கடினம். சீனாவில் பாதுகாப்புத்துறை சார்ந்து மூன்று அமைச்சுக்கள்
உள்ளன.
முதலாவது ; தேசிய
பாதுகாப்பு அமைச்சு. இதன் கீழ் தான் செஞ்சேனை எனப்படும் சீனாவின் முப்படைகளும்
உள்ளன.
இரண்டாவது : அரச பாதுகாப்பு அமைச்சு. இதுவே
சீனாவின் முதன்மையான புலனாய்வு அமைப்பு. இதன் பிரதானமான கடமை வெளியகப் புலனாய்வுப்
பணிகளை மேற்கொள்வதாகும். இந்தியாவின் றோ எனப்படும் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அலகு,
அமெரிக்காவின் சிஐஏ எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவு
போன்றவற்றுக்கு இணையாக இது செயற்படுகிறது. சுருக்கமாக இது எம்எஸ்எஸ் என்று
அழைக்கப்படுகிறது.
மூன்றாவது : பொதுமக்கள் பாதுகாப்பு
அமைச்சு. இது சீனாவின் பொலிஸ்துறைக்கு பொறுப்பாக உள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு,
சட்டம் ஒழுங்கைப் பேணுவது இதன் பொறுப்பு.
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த மூன்று துறைகளுமே, அதாவது பொலிஸ், முப்படைகள், மற்றும் புலனாய்வுத்துறைகள் என்பன
கோத்தாபய ராஜபக்சவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழேயே செயற்படுகின்றன.
சீனாவில் இவை தனித்தனி அமைச்சுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் இலங்கைக்கு வந்து சென்ற சோயு
குய்ங், சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சின் உதவி
அமைச்சராவார். 1983ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சு,
சீனாவின் வெளியகப் புலனாய்வு பணிகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்பு
மட்டுமல்ல, சீனாவுக்குள்ளேயும் சக்தி வாய்ந்த ஒன்று.
சீன பொலிசுக்கு உள்ளது போன்ற, அதிகாரங்கள் இதற்கும் உள்ளது.
சந்தேகநபர்களை கைது செய்து விசாரிக்க,
தடுத்து வைக்க, நீதிமன்றத்தில் நிறுத்த- இந்த
அமைச்சுக்கு அதிகாரம் உள்ளது.
சீனாவின் வலுவான அமைச்சு ஒன்றின் உதவி
அமைச்சரே இலங்கைக்கு வந்து சென்றுள்ள போதிலும், அதற்கு
அவ்வளவாக ஊடக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதேவேளை, இந்தச்
செய்தி அடக்கி வாசிக்கப்படவும் இல்லை.
அதற்கும் காரணம் உள்ளது.
அடக்கி வாசிக்கப்பட்டதால், சீனாவின் அரச பாதுகாப்பு உதவி அமைச்சரின் பயணத்தை மிகச்சாதாரணமாக
எடுத்துக் கொண்டவர்களே அதிகம் பேர். இவரது பதவிப் பொறுப்பு என்ன என்பது குறித்தோ,
அதன் முக்கியத்துவம் குறித்தோ, பல ஊடகங்கள்
தவறான தகவல்களையே வெளியிட்டன. அது கூட இந்தப் பயணத்தின் முக்கியத்துவம் பெரிதாக
உணரப்படாமைக்கு ஒரு காரணம்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் உள்ள நெருக்கம்
மிகவும் ஆழமானது.
அது நாளுக்கு நாள் விரிவாக்கம் பெற்று
வருவது யாவரும் அறிந்ததே.
சீனாவைப் பொறுத்தவரையில், இந்தியா, ஜப்பான், அமெரிக்கா
இந்த மூன்று நாடுகளையும் தனக்குச் சவாலான சக்திகளாக கருதுகின்றது. இந்த மூன்று
நாடுகளும் இலங்கையுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதும், சீனா அவற்றை விட அதிக தொடர்பைக் கொண்டிருப்பதும் முக்கியமான விடயங்கள்.
அண்மையில் இலங்கையுடன் ஜப்பான் செய்து கொண்ட கடல்சார் உடன்படிக்கை, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் தலையீட்டை குறைப்பதை அடிப்படையாக கொண்டது.
அந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தான், சீன அரச பாதுகாப்பு உதவி அமைச்சரின் பயணம் இடம்பெற்றுள்ளது.
தென் சீனக் கடலிலும், பசுபிக் பிராந்தியத்திலும் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில்
சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஒரு பனிப்போரே நடந்து கொண்டிருக்கிறது. அதேவேளை,
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போர், மிகப் பிரபலமான ஒன்று.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவினதும்
அமெரிக்காவினதும் ஆதிக்கத்தை உடைக்க, சீனா பெரும் வியூகத்தை
வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது. சீனாவின் முதல் விமானந்தாங்கி கப்பல் கூட,
இந்தியப் பெருங்கடலில் தான் நிலை கொள்ளப் போகிறது. இவ்வாறு இந்தியப்
பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனத் தலையீட்டை முறியடிக்க இந்தியாவும்
தன்பங்கிற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.
சீனாவின் நீர்மூழ்கிகளை எதிர்கொள்ளும்
வகையில் விசாகப்பட்டினத்துக்கு அருகே ஒரு நிலத்துக்கடியிலான நீர்மூழ்கித் தளம்
ஒன்றை அமைக்கும் பணிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளதாக அண்மையில் தான் செய்திகள்
வெளியாகின. இத்தகைய சூழலில் தான் சீன உதவி அமைச்சரின் பயணம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவை உளவு பார்ப்பதற்கான ஒரு தளமாக, இலங்கையை சீனா
பயன்படுத்தி வருகிறது என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. அதுவும், இலங்கைக்கு நெருக்கமாக உள்ள விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படைத்
தலைமையகமும், கிழக்கு கடலோரப் பகுதிகளில் உள்ள ரொக்கட்
ஏவுதளங்களும் சீனாவின் கவனத்துக்குரிய முக்கிய இலக்குகளாகும். இந்தியாவின்
நீர்மூழ்கிகளின் பிரதான தளமாக விசாகப்பட்டினமே உள்ளது. இங்கிருந்து இந்திய
கடற்படைக்கான ஏவுகணைகள் பரிசோதிக்கப்படுகின்றன.
அதேவேளை, ஒரிஸ்ஸாவின்
வீலர் தீவு, சந்திப்பூர் ஆகியன இந்தியாவின் முக்கியமான
ஏவுகணைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் ஏவுதளங்களாக உள்ளன. இந்தியாவின் விண்வெளி
ஆராய்ச்சி ஏவுகணைகள் அனைத்தும் ஆந்திராவின் சிறிஹரிகோட்டாவில் இருந்தே
ஏவப்படுகின்றன. இவையெல்லாம் சீனாவால் உன்னிப்பாக கண்காணிக்கப்படும், இலக்குகளாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்தமான் தீவுகளுக்கு அருகே
மீன்படிப் படகு போன்று வடிவமைக்கப்பட்ட சீனாவின் உளவுக்கப்பல் ஒன்றை இந்தியக்
கடற்படை துரத்திச் சென்றபோது, அது கொழும்புத் துறைமுகத்தில்
அடைக்கலம் தேடிக்கொண்டதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். கடலின்
தன்மையையும், இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் உள்ள
ஏவுதளங்களயும் கண்காணிக்கும் பணியில் அந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டதாகவே
கருதப்பட்டது. இந்தியாவை உளவு பார்க்க இலங்கையை மட்டுமன்றி, நேபாளத்தையும்
கூட சீனா பயன்படுத்திக் கொள்கிறது. நேபாள எல்லையில் 11 புலனாய்வு
தகவல் நிலையங்களை சீனா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த
நடவடிக்கைகளுக்கெல்லாம் பொறுப்பாக இருப்பது சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சுத்
தான். இந்தியாவின் பாதுகாப்பு இரகசியங்களை இந்தப் பிரிவு பல்வேறு வழிகளில் பெற்றுக்
கொள்கிறது.
மரபுசார்ந்த வழிமுறைகளை மட்டுமன்றி,
இணையவழி சைபர் தாக்குதல்கள் மூலம், இந்தியாவின்
முக்கிய பாதுகாப்புக் கட்டமைப்புகளினுள் ஊடுருவியும் பெருமளவு இரகசியங்களையும் சீன
உளவுப் பிரிவு களவாடியுள்ளது. அண்மையில், இஸ்ரோ எனப்படும்
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி பிரிவு, மற்றும் ஏவுகணைகளை
வடிவமைக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் இரகசியங்கள் கூட
திருடப்பட்டன. தமது பெருமளவு பாதுகாப்பு இரகசியங்களை சீனா திருடியுள்ளதாக
அண்மையில் இந்தியா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுக்கும் கூட,
சீனாவின் இத்தகைய நெருக்கடிகள் இருக்கவே செய்கிறது. இவை அனைத்துமே,
சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் கிளை
அமைப்புகளால் தான், வழிநடத்தப்படுகின்றன. இத்தகைய மிகவும்
வலுவான அமைப்பு ஒன்றின் இரண்டாவது பொறுப்பு வாய்ந்த அதிகாரியின் இலங்கைப் பயணத்தை
இந்தியாவோ அமெரிக்காவோ, ஏன் ஜப்பான்கூட அவ்வளவு இலகுவாக
எடுத்துக் கொள்ளாது.
அம்பாந்தாட்டையில் மட்டுமன்றி, சீன புலனாய்வு முகவரமைப்பு இப்போது திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தின்
மீது கண்வைக்கத் தொடங்கியுள்ளது என்பதை, இவரது பயணத்தின்
மூலம் உணரமுடிகிறது. இந்தப் பயணம் இந்தியாவைக் குறிவைத்த நகர்வாகவே
கருதப்படுகிறது. இது இந்தியாவுக்கு எரிச்சலூட்டுகின்ற ஒரு நடவடிக்கையாகவே
இருக்கும்.
ஜெனிவாவுக்குப் பின்னர், இந்திய – இலங்கை பாதுகாப்புச்செயலர்கள் நிலையிலான
கலந்துரையாடல் பிற்போடப்பட்ட சூழலில், சீன புலனாய்வு
அமைப்பின் உயர் தலைவரின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும்
கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மருத்துவ பீடத்துக்கான 702 படுக்கைகள் கொண்ட போதனா மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளையும் கூட
சீனாவிடம் தான், ஒப்படைத்துள்ளார் பாதுகாப்புச்செயலர்
கோத்தாபய ராஜபக்ச. இவையெல்லாம் சீனத் தலையீடுகள் இலங்கையில் வலுவாகி வருவதன்
அடையாளங்கள்.
இலங்கை – சீன
நெருக்கம் இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு வெறுப்பை
ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்த போதிலும், அதை இலங்கை
திரும்பத் திரும்பச் செய்து வருவது தான் ஆச்சரியம். சீனாவுடனான நெருக்கத்தை காரணம்
காட்டி இந்த நாடுகளை மடக்கலாம் என்று கருதுகிறது இலங்கை. ஆனால் அது சாத்தியமற்றது
என்று கடந்தவாரம் சரத் பொன்சேகா கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சுபத்ரா -இன்போ தமிழ்
**
சீன உதவிப்பாதுகாப்பு அமைச்சரை வியக்க
வைத்த கரும்புலிப் படகு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள
சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் சோயு குய்ங் தலைமையிலான சீனப் பாதுகாப்பு
அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் திருகோணமலையில் பாதுகாப்பு நிலைகளை
பார்வையிட்டுள்ளது.
சிறிலங்கா கடற்படையின் கிழக்குத் தலைமையகம்
அமைந்துள்ள டொக்யார்ட்டுக்கு சென்ற இந்தக் குழுவினர், திருகோணமலைத்
துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர்.
படகு மூலம் இவர்கள் திருகோணமலைத்
துறைமுகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், அங்குள்ள
சிறிலங்கா கடற்படை அருங்காட்சியகத்துக்கும் சென்றனர்.
கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்டு
பயன்படுத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் படகு ஒன்றை பார்த்த சீனாவின் உதவிப்
பாதுகாப்பு அமைச்சர் வியப்புத் தெரிவித்துள்ளார்.
கடற்புலிகளின் படகுகள் வடிவமைப்பு மற்றும்
அவர்கள் கையாண்ட தாக்குதல் உத்திகள் குறித்தும் சீனப் பாதுகாப்பு அமைச்சர்,
சிறிலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்தியத் தளபதியிடம் கேட்டறிந்து
கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.