தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! 

உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி
மூன்று நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியொரு நாடுகளும் உள்ளன. அதே எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை. ஐக்கிய நாடுகள் மன்றிலும் தமிழ் நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை. இது பற்றி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவர்கள் நம்மில் பலர். 

அதற்கான எண்ணங்களை கோடிக்கணக்கில் எண்ணினோம். பேச்சுகளை ஆயிரக்கணக்கில் பேசினோம். கொள்கைகளை நூற்றுக்கணக்கில் வெளியிட்டோம். திட்டங்களைப் பத்துக் கணக்கில் வகுத்தோம். ஆனால் செயலில் ஒன்றையாவது நாம் செய்யவில்லை.

கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன்! வீரனிலும் ஒரு மாவீரன்!! அவனே ஈழத்தின் வீரமகன் பிரபாகரன்!!! ஆயுதங்களைச் சேகரித்தான். தன் வாழ்விடமாகிய தமிழீழத் தாயகத்தையும் தன் மொழியையும், தன் மக்களையும் காப்பாற்றிட ஆயுதப்போரைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினான். போரில் இறங்கி விட்டான். அவனுக்கு ஆரம்பத்தில் சில இளைஞர்கள் தோள் கொடுத்தனர். சிலர் பலராகி பல்லாயிரக்கணக்கினராகி விட்டனர். ஆயிரத்திக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிரையும் உடலையும் விடுதலைக்காக அர்ப்பணித்தனர்.

போர் நடைபெற்றது, ஓராண்டு ஈராண்டல்ல; பல ஆண்டுகள். அவனை எதிர்த்து அடக்க முயன்ற அரசுகள் ஒன்றல்ல, இரண்டு. பெரும்பான்மை மக்களைக் கொண்ட சிங்கள அரசு பிரபாகரனோடு போராடி வெல்ல முடிய வில்லை. இறுதியில் அவனோடு போர் நிறுத்தம் செய்ய வந்தது. பேச்சு வார்த்தைக்கு அழைத்ததே தவிர சிங்கள அரசினால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. இதனால் பிரபாகரன் அந்த அரசுக்குச் சரிசமமாக இன்று காட்சியளிக்கிறான்.
 

சீனாவையும் பாகிஸ்தானையும் போரிட்டு வென்ற இந்தியப் பேரரசு பிரபாகரனை அடக்க எழுபத்தி ஐயாயிரம் போர் வீரர்களைத் தமிழீழத்துக்கு அனுப்பியது. இறுதியில் அவனை அடக்கவோ பிடிக்கவோ முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி வந்தது.
 

இதில் ஒரு அழகு. இந்த இரு அரசுகளுக்கும் நாடு உண்டு. படையுண்டு. ஆயுதங்களுண்டு. தங்குவதற்கு இடமும் உண்டு. உணவுண்டு. உடையுண்டு. பொருள் மற்றும் போர்க் கருவிகளுமுண்டு. கப்பற்படையும், தரைப்படையுமுண்டு.

மேற்கூறியவற்றில் எதுவுமே இல்லாதது மட்டுமல்ல காலுக்கு மிதியடி கூட இல்லாது, உடம்பிற்கு நல்ல உடையுமில்லாது சிறுசிறு காடுகளிலும் புதர்களிலும் மறைந்து நின்று ஒரு நாள் அல்ல இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இரு அரசுகளோடும் போராடியிருக்கிறான் மாவீரன் பிரபாகரன்.

இத்தகைய வீரன், ஒருவன் புறநானூற்றுக்குப் பிறகு இரண்டாயிரமாண்டுகளாக எவனும் தோன்றியதில்லை.

தம்பி பிரபாகரனின் செயல் சரியா தவறா என்று ஐயப்பட்டவரும் அவனது நோக்கம் நல்லதா கெட்டதா என்று ஐயப்பட்டவரும் அவன் அடையப் போவது வெற்றியா தோல்வியா என்று ஐயப்பட்டவருமுண்டு. ஆனால் அவன் ஒரு மாவீரன் என்பதில் யாருக்கும் ஐயப்பாடு ஏற்பட்டதில்லை.

தம்பி பிரபாகரன் தமது இலட்சியப் பதாகையை ஏந்தியபடி போர் முனையிலிருந்து மீண்டு பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடனிருந்து தமிழீழ நாட்டுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் நற்றொண்டுகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்கவென வாழ்த்துகிறேன்.
 

-முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.

(1990ஆம் ஆண்டு தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளையொட்டி அறிஞர் கோவை மகேசன் அவர்கள் நடத்திய 'வீரவேங்கை' இதழுக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய கட்டுரை).

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -